ஆதாரம்
வெற்றியின் அளவுகோள் பலருக்கு பலவிதமாக இருக்கும். அப்படி இருப்பது வெற்றியின் இயல்பு மட்டுமின்றி வெற்றியாளரின் இயல்பை பொறுத்ததும் கூட. நம்மில் சிலருக்கு வசதி வாய்ப்புகளாக, சொந்த பந்தங்களாக, கடல் தாண்டும் பிரயாணமாக, உயரிய பதவியாக அஃது பரிமாணிக்கிறது. எனவே வாழ்க்கையின் வெற்றி வாழ்தலில் இருக்கிறது.
வெற்றிப் பெற்ற அனைவரும் அவ்வப்பொழுது தம்மைத்தாமே உற்று நோக்கி செயல்படுபவர்களாகவே உள்ளனர். தங்கள் பணிகளை விடுத்து நாளில் சில மணி நேரமாவது அவர்கள் அப்படி செய்ய பழகிக்கொண்டுள்ளனர். எப்படி உற்று நோக்குவது? அது சாத்தியமா? மனம் குவிந்தால் அது சாத்தியம்._
வாழக்கை புரட்டிப் போடும் தருணங்களை உற்று நோக்கி பாருங்கள், உங்களுக்கு ஒரு அழகான பாடத்தை பயிற்றுவிக்க இயற்கை எடுக்கும் முயற்சியே அஃது.
மனம் எவ்வாறு குவியும். இந்த கேள்விக்கு பதில் நாம் அன்றாடம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. அன்றாட சலனங்கள் ஊடே அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் பேரிடர் ஏற்படும்பொழுது மனம் குவிந்து அதனை நோக்கும். சாலை நெரிசலில் மனம் கலவரப்படுபவனுக்கு வாழ்க்கை நெரிசலை எ_ப்படி சமாளிப்பான்? _எப்படி கலவரப்படாமல் இருப்பது? மனம் குவிய ஒரு எளிய முறை உள்ளது. நம்மோடு பிணைந்து நிற்கும் ஒன்றை கவனித்தால் மனம் குவியும். அது என்ன? அது தான் நம் மூச்சு._
நாம் எவ்வாறு மூச்சு விடுகின்றோம் என்பதை கவனிக்கத் தொடங்குங்கள். அதிகபட்சமாக நாம் மேம்போக்காக தான் மூச்சு விடுகின்றோம்(shallow breathing). ஆழ்ந்து மூச்சு விடும்(deep breathing) பழக்கம் நம்மிடம் அதிகம் இல்லை. அடுத்த முறை கோபம் எழும்பொழுதும், கடும் சொல் சொல்லும் பொழுதும் மூச்சை கவனியுங்கள். கண்டிப்பாக மேம்போக்காக தான் இருக்கும். கவனிக்க மட்டுமே செய்யுங்கள். வெறும் சாட்சியாகவே இருங்கள். எதையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
இந்த கவனிப்பால் உங்கள் மூச்சு விடுதலின் தன்மை மாறிப் போகும். தானாகவே அஃது ஆழமாக மாறும். ஆழ்ந்து மூச்சு விடுகின்றவர் வாழ்க்கையை ஆழ்ந்து கவனிப்பார். ஆழ்ந்து கவனித்தால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள் புரியும். நம் அண்டை எது, அந்நியம் எது என்று நிதர்சனமாக தெரியும். இது தான் முதல் படி. இது தான் அடிப்படை. இது தான் ஆதாரம்.