அனுபவங்கள்
அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை. உங்களின் அனுபவங்களைப் பொறுத்தே உங்கள் முயற்சிகள் அமையும். ஒருவர் அசாதாரண தைரியத்துடன் மேற்கொள்ளும் காரியம் மற்றவருக்கு கலவரத்தை ஏற்படுத்தக் காரணம் அவர்களின் அனுபவமே. நாம் நம்புவது அனுபவங்களாகவும் அந்த அனுபவங்களே நம்பிக்கையாகவும் வாய்க்க பெறுகின்றன.
சிற்பம் ஒன்று தன்னைத்தானே உளி கொண்டு செதுக்குவது போல நம் அனுபவங்கள் நம்மை செதுக்குகின்றன. இந்த பேருண்மையை அறிந்தவர்கள் அனுபவங்களை அதிகமாக பெற முயன்று கொண்டே இருப்பர். அதிக அனுபவங்கள் வாய்க்கப் பெறின் வாழ்க்கையை பற்றிய சம நோக்கு ஏற்படும். அனுபவங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.
நிறைவாய் வாழும் இரகசியம் எதிர்பார்ப்புகளின் ஆளுமையில் தான் இருக்கிறது.
நமக்கு ஏற்படும் அனுபவத்தை, மனம் ஒரு நிழற்பட கருவி போல அழகாக பதிவு செய்து கொள்கிறது. பிடித்த ஒன்றை அனுபவமாகப் பெறின் அதை மறுபடியும் அனுபவிக்க நாடுகிறது. அந்த அனுபவம் மறுபடியும் அமையும் பொழுது மனம் பதிவு செய்த முந்தைய அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறது. இப்பொழுது ஏற்பட்ட அனுபவத்தின் விளைவு முன்னர் ஏற்பட்ட அனுபவத்தைவிட சிறப்பாக அமையுமானால் அஃது அடுத்த முறைக்கான எதிர்பார்ப்பிற்க்கு வித்தாக அமைகிறது. அதுவே முரணாக அமையுமானால் அஃது ஏமாற்றமாக மாறுகிறது. எனவே அனுபவங்களைப் பொறுத்தே நம் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் அமையும்.
நம்முடைய விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள் மீது பிரதிபலிக்கச் செய்து அதன்படி அவரில்லை என்று தெரிந்தவுடன் மகிழ்ச்சி அடைவதோ சலனப்படுவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஆக ஏமாற்றத்திற்க்குக் காரணம் நம் எதிர்பார்ப்பு. அதற்கு அடிப்படை நாம் அனுபவங்களை ஒப்பிடும் முறை. அதிக அனுபவங்கள் பெற ஒப்பீட்டை நிறுத்த வேண்டும். இதற்கு அடிப்படை சென்ற வார பதிவில் உள்ளது.