முயற்சி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
இன்று (போகி) ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும் பழமொழி. இது “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதை வலியுறுத்தும் முதுமொழி.
சுழன்று கொண்டே இருக்கும் பூமி மாறுவது போல நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். மேலோட்டமாக எந்த மாற்றங்கள் தெரியாமல் போனாலும் ஆழ்ந்து நோக்கினால் ஏற்பட்ட மாற்றங்கள் புரியும். மாற்றம் என்றவுடன் ஏதோ அது ஒரு பெரிய நிகழ்வு என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறு தீப்பொறி போல நமக்குள் ஏற்படும் சிறு மாற்றங்கள் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும். நம்மில் என்ன மாற்றம் வேண்டும்? நம்முடைய ஆதாரம் நம் எண்ணங்கள்.
- எண்ணம் மாறினால் செயல் மாறும்.
- எண்ணம் உயர்ந்தால் செயல் உயரும்.
- செயல் உயர்ந்தால் வெற்றி நிச்சயம்.
எண்ணங்கள் உயர்வதற்கான முதற்படி; முயற்சி. இதனால்தான் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று சான்றோர் கூறுவர்.
இன்னும் கொஞ்சம் முன்னேறு.
நம் முயற்சி எவ்வாறு இருக்கவேண்டும்? மலையேற்றம் (Rock climbing) மேற்கொள்பவர்களை கவனித்திருக்கிறீர்களா? பொதுவாக அவர்கள் தனித்தே மலை ஏறுவர். ஒவ்வொரு கல்லாக தேர்ந்தெடுத்து லேசாக தாங்கிப்பிடித்து, தேர்ந்தெடுத்த கல் சரியானதே என்று உறுதி செய்த பின்னரே, தங்கள் முழு நம்பிக்கையை வைத்து அந்தக் கல்லைப் பிடித்து ஏறுவர். மலை ஏற்றத்தின் அடிப்படைத் தத்துவம் – “இன்னும் கொஞ்சம் முன்னேறு”. பெரிய தூரங்களைக் கடக்காமல் சிறுசிறு இடைவெளிகளைக் கடந்து முன்னேறுவது தான் இதன் பொருள். நம் வாழ்க்கையும் ஒரு மலையேற்ற முயற்சிதான். ஒவ்வொரு முயற்சியாக தேர்ந்தெடுத்து அது சரியானதே என்று உறுதி செய்த பின்னரே அதனை மேற்கொள்ள வேண்டும்.
சாதனையாளர்கள் எப்போதும் தனித்தே இருகின்றனர். அவர்கள், தங்களுடைய இயலாமையை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவர்களைவிடப் பெரியதாக உள்ளன. அடுத்தமுறை சிறுவர் குழாம் மைதானத்தில் விளையாடுவதை நீங்கள் பார்க்க நேரிட்டாலோ, முதியவர் கடற்கரையில் தனியாக நடப்பதை பார்த்தாலோ நீங்கள் உணர வேண்டியது இது தான். அவர்கள் அவர்களுடைய ஆற்றலை அபிவிருத்தி செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் நமக்குச் சுட்டுவது என்ன? நாம் நம்முடைய இருப்பை விட பெரிய காரியங்கள் செய்ய முற்பட வேண்டும். நாம் இதுவரை வெற்றிக் கொண்ட அனைத்துக் காரியங்களும் ஆரம்பத்தில் பூதாகரமாகத்தான் தோற்றமளித்திருக்க வேண்டும். அவைகளை விட நமது முயற்சிகள் பெரியதாக இருந்ததினால் தான் நாம் வெற்றி பெறுவதுச் சாத்தியமாயிற்று. உங்களுக்குளே நீங்கள் தனித்து, ஒரு வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும். ஒரு நாளில் 5 நிமிடமாவது தனித்து இருக்க பழகி கொள்ளுங்கள். முயன்று பாருங்கள் சாதனைகள் சாதாரணமாகும்.
<cite>Written on January 14, 2019 - Ported from elsewhere.</cite>